“அடிப்படை உறுப்பினரே இல்லை… எதற்கு அவங்க புதுப்பிக்கணும்”- சசிகலா குறித்து ஓபிஎஸ்

சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அதனால் அவரை புதிய உறுப்பினராக கட்சியில் சேர்க்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

அதிமுக சட்ட விதி 30 பிரிவு 3 படி ஒவ்வொரு அமைப்பு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பும் பழைய உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்தல், மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதன்படி,  இன்று அதிமுகவில் உறுப்பினர்களுக்கான அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்குதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துக்கொண்டு அட்டைகளை வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறுப்பினர் அட்டை

அதனைத் தொடர்ந்து  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். அதன்பின்பு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். அதன்பின்னர் இருவரும் இணைந்து அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனிசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோருக்கான உறுப்பினர் அட்டையயை வழங்கினர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறுப்பினர் அட்டை

அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அதிமுகவில் 1 கோடியே 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது இன்று வழங்கப்படவுள்ள புதிய உறுப்பினர் அட்டைகள் பெற்றவர்கள் மட்டுமே அதிமுக அமைப்பு தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றார். மேலும் சசிகலா அதிமுகாவில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டாரா என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை எதற்காக அவர் அட்டை புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

ALSO READ…