அத்வானி தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் அழைப்பு!

குஜராத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வெற்றி தொகுதியான காந்தி நகரில் அமித்ஷா போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கைவைக்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமித் ஷா

பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானி குஜராத்தில் உள்ள காந்திநகர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என இம்மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, காந்திநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேஜல்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் கிஷோர் சவுகான் கூறுகையில், ‘தேசியத் தலைவரான அமித் ஷா, காந்திநகர்நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர்.

அவர்களின் விருப்பத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம். காந்திநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சார்கேஜ் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னர் பதவி வகித்தவர் என்ற வகையில் இங்குள்ள அனைவரையும் அமித் ஷாவுக்கு நன்றாக தெரியும்’ என குறிப்பிட்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய பாஜக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் பட்டேல், காந்திநகர் தொகுதியில் போட்டியிட இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே இங்கு அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்’ என தெரிவித்தார். அமித் ஷா தற்போது ராஜ்ய சபா எம்.பியாக இருந்துவருகிறார். அவருக்கான பதவிக் காலம் 2022-ம் ஆண்டு வரை உள்ளது.Loading… பாஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1996 நீங்கலாக காந்திநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதிலிருந்து அத்வானி கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

Also see: