இடைத்தேர்தல் மூலம் மோடி அரசை மக்கள் நிராகரித்துள்ளனர் – காங்கிரஸ்

கர்நாடகாவில் மூன்று மக்களவை மற்றும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம், சந்தர்ப்பவாத கூட்டணி என்ற பாஜகவின் முழக்கம் பொய்யாகியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களுக்கு 30 கோடி வரை கொடுத்து பாஜக இழுக்க முயல்வதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார். இந்த வெற்றியை போன்றே மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் உடன் இணைந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனவும் குமாரசாமி கூறினார்.

இடைத்தேர்தல் முடிவு மோடி அரசை மக்கள் நிராகரித்துள்ளதைக் காட்டுவதாக கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மாற்றத்தை நோக்கி தேசமே பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் மோடி மற்றும் பாஜக அரசை மக்கள் நிராகரித்தாகவும், நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புவதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது என்றும் குண்டுராவ் கூறினார்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் இந்த தேர்தல் முடிவுகள் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ம.ஜ.த. இரண்டு கட்சியினரும் சிறப்பாக செயல்பட்டனர். மக்களின் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணி, அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வெற்றிபெற்றுள்ளதாக விமர்சித்தார்.

Loading…

Also see…