இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்

சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டது.இதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சிலை செய்ததில் 5.75 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தாமல் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரியவந்தது.

இந்த முறைகேட்டில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் கவிதாவை ஜூலை 31-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்ற கவிதா இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுதலையானார். கவிதா மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், கவிதாவை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்து, நேர்மையான அதிகாரி கவிதாவை பழிவாங்கி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.