இவங்க இல்லாட்டியும்.. இந்தியாவால இங்க ஜெயிக்க முடியாது….: மெக்ராத் ‘வார்னிங்’!

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றனர்.

வெற்றியே இல்லை:
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி வரும் 21ம் தேதி, பிரிஸ்பேனில் துவங்குகிறது.

தீவிர பயிற்சி:
இந்நிலையில் இத்தொடரில் சாதிக்க, இந்திய அணி வீரர்கள், தீவிர, பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகியோர் அங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ள நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜெயிக்க முடியாது:
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத போதும், இந்திய அணியால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

நல்ல வாய்ப்பு:
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாததது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர்கள் அணியில் இல்லை என்றாலும் இளம் வீரர்கள், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க துடிப்பாக செயல்படுவார்கள். அதனால் இத்தொடரில் பரபரப்பு பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன். இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றார்.