உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குறைக்கப்பட்ட தீபாவளி காற்று மாசு!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியன்று சென்னையில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளியன்று ஏற்படும் மாசு அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக பட்டாசு வெடிப்பதில் உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அந்த கட்டுப்பாடு பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. எனினும், இதனால்  ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைந்துள்ளதே அந்த மாற்றம்.சென்னையில் ஆலந்தூர், வேளச்சேரி, மணலி ஆகிய பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின்படி, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியில் குறைந்த அளவே மாசு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு தீபாவளியன்று வேளச்சேரி பகுதியில் 299 ஆக இருந்த காற்று மாசுவின் அளவு, இந்த ஆண்டு தீபாவளியில் 41 ஆக குறைந்துள்ளது.

இதேபோல, கடந்த ஆண்டு ஆலந்தூர் பகுதியில் 242 ஆக இருந்த காற்று மாசுபாடு இந்த ஆண்டு 56 ஆக குறைந்துள்ளது. மணலி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று 259 ஆக இருந்த காற்று மாசுவின் அளவு, இந்த ஆண்டு  33 ஆக குறைந்துள்ளது என்று  மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Also watch

Loading…