‘உண்மை’, மோடியை சிறைக்குத் தள்ளும்: பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

உண்மை… பிரதமர் மோடியை சிறைக்குத் தள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்.அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். கருணாநிதி மறையவில்லை. அவர் நம்மை வழிநடத்தி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் கருணாநிதி இரண்டறக் கலந்துள்ளார். கருணாநிதி மறைந்தாலும் அவரது கொள்கை எப்போதும் தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும்.

தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி மோடியின் கையில் இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எங்களுடைய கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி. மோடியால், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பார்கள். உற்பத்தித்துறையில் சீனாவுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழகம் வளர்ச்சிபெறும்.

உலகத்துக்கு உற்பத்தி தலைநகராகத் திகழும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளது. உங்கள் கையிலிருக்கும் மொபைல் போன்களைப் பாருங்கள். அதில், சீனாவின் தயாரிப்பு என்று இருக்கும். மத்தியில் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியும் அமைந்தால், மொபைல் போனில் பின்னால் தமிழ்நாட்டின் தயாரிப்பு என்று இருக்கும். பாதுகாப்புத் துறையின் 30 ஆயிரம் கோடி ரூபாய் அனில் அம்பானியின் கைக்குச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிஞர் திருவள்ளூவர் உண்மை வெல்லும் என்று கூறியுள்ளார். உண்மை, பிரதமர் மோடியை சிறையில் தள்ளும். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலையில்லாப் பிரச்னை நிலவுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரியால், முறைசாரா தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அழிந்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே வரி, எளிமையான வரி, குறைந்தபட்ச வரியை அமல்படுத்துவோம். கடை உரிமையாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இந்த மோசமான ஜி.எஸ்.டிவரியால் பாதிக்கப்படமாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.

Also see:Loading…