எத்தியோப்பியா விமான விபத்தால்… புதிய வெளியீட்டை தள்ளிவைத்த போயிங்…!

எத்தியோப்பியாவில் 157 பேரை பலி கொண்ட விமானத்தில் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தனது 777x விமானத்தின் அறிமுகத்தை போயிங் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 8 விமான பணியாளர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரும் அடக்கம்.இந்திய அதிகாரி ஷிகா கார்க், வைத்யா பன்னாகேஷ், வைத்யா ஹன்சின், நுகவரபு மனிஷா என்ற நால்வர் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான எத்தியோப்பியா விமானத்தின் பாகங்கள்

ஷிகா கார்க் ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச் சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை தவிர மேலும் 29 நாடுகளை சேர்ந்த பயணிகள் விபத்தில் பலியாகினர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனினும் விமானி சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் விபத்து ஏற்பட்டதாக எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா விமானம்Loading… விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் சீனாவிலும் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு, வர்த்தகரீதியிலான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு முன் இதே ரக விமானம் ஒன்று இந்தோனேசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்தனர்.

போயிங் விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது உலகம் முழுவதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனை தொடர்ந்து 777X, ரக விமானங்களின் அறிமுகத்தை தள்ளிவைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

425 பயணிகளை ஏற்றிச் செல்லும் 777X, ரக விமானங்களை நாளை மறுதினம் அறிமுகப்படுத்த போயிங் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய எஞ்ஜின்களை கொண்டதாக 777X, விமானங்கள் வர்ணிக்கப்படுகின்றன. போயிங் நிறுவனத்தால் “The Boss” என அழைக்கப்படும் 777X, ரக விமானங்களுக்கு இதுவரை 300 ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also See…  ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்… சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தேர்வு