ஒடிஷாவிற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிஷாவில் கரையைக் கடக்கவிருப்பதால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் தித்லி புயல் வலுவடைந்து, அதி தீவிர புயலாக மாறி ஒடிஷாவில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை ஒடிஷாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதேபோல் அரபிக்கடலில் உள்ள தீவிர புயல் லூபன் தற்போது ஏமனில் இருந்து 610 கிலோ மீட்டரில் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.இதையடுத்து மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மேற்கு அரபிக்கடலுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் புயல் கரையை கடக்க உள்ளதால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்த வேகம் 125 கி.மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ள இந்திய வானிலை மையம், ஆந்திரா மற்றும் ஒடிஷாவின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை, மிதமிஞ்சிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இதனிடையே ஒடிஷாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பூரி, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.