ஒடிஷாவுக்கும் ஆந்திராவுக்கும் இடையே கரையை கடந்தது தித்லி புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தித்லி புயல் ஒடிஷாவுக்கும் ஆந்திராவுக்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது ஒடிஷாவின் கோபால்பூரில் 126 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசியது.

மத்திய வங்கக் கடலில் உருவான தித்லி புயல் ஒடிஷாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் கோபால்பூர் பகுதியை புயல் தாக்கியது. மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கடந்து சென்றதால், கோபால்பூரில் மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.இதேபோல் கலிங்கபட்டினம் பகுதியிலும் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. புயல் மற்றும் கனமழை காரணமாக ஸ்ரீகாகுளம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்கள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.