காவல்துறையிடமிருந்து மாணவர்களை அரணாக நின்று காத்த மாணவிகள்! #pollachicase

பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை காவல்துறையினர் கைதுசெய்ய முயன்றபோது மாணவிகள் ஒன்றாக கையைக் கோர்த்து அரணாக நின்றனர். அதனால், காவல்துறையினர் போராட்டத்தைக் கலைக்க முடியாமல் திணறினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றன. திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளை மீறி, ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புள்ளதாக கருதப்படும் பார் நாகராஜனுக்கு சொந்தமான மதுபான பாரை மக்கள் சூறையாடினர்.

கோட்டூர் அழியாறு சாலையில் உள்ள ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே பார் நாகராஜனின் டாஸ்மாக் பார் உள்ளது. பாரின் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், திடீரென பாருக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் ஒருங்கிணைந்து இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து, மாணவர்களைக் குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற, மாணவிகள் அனைவரும் ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்தபடி, பாதுகாப்பு வளையம் அமைத்து நின்றனர். அதனால், மாணவர்களைக் கைதுசெய்ய முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

Also see: