கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா: போலீஸ் தடியடி – பொதுமக்கள் கல்வீச்சு

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழாவிற்கு செய்யப்பட்ட ஏற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்த, பதிலுக்கு பொதுமக்கள் கல்வீசி தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த மாதேபள்ளி கிராமத்தில் இன்று எருது விடும் திருவிழா நடத்த திட்டமிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன.இந்நிலையில் அங்கு சென்ற வேப்பனஹள்ளி போலீசார் அனுமதி இல்லாததால் எருது விடும் திருவிழா நடத்தகூடாது என தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தும், யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சமபவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதையடுத்து, போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். தொடர்ந்து அனுமதி இல்லாமல் எருது விடும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டும் இதே போல் எருது விடும் திருவிழா நடத்தியபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.Loading… Also see…