கிளி ஜோசியரைக் கொன்றது ஏன்? குற்றவாளி சொன்ன காரணத்தை கேட்டால் ஷாக்காயிடுவீங்க…

காதலியை மயக்குவதற்கு கிளி ஜோதிடர் சரியாக வசியம் வைக்கவில்லை என கருதியதால், அவரைக் கொலை செய்ததாக குற்றவாளி ரகு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருப்பூர் குமரன் சாலையில் கடந்த மாதம் கிளி ஜோதிடர் ரமேஷை, ஹெல்மட் அணிந்த நபரொருவர் சரிமாரியாக வெட்டிக் கொலை செய்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைத்தது. ஜோதிடரை கொலை செய்த ரகுவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.இதையடுத்து, கடந்த 3-ம் தேதி ரகுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ரகு அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

திருப்பூரில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்த ரகுவுக்கு, ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரை வசியம் செய்வதற்காக கிளி ஜோதிடர் ரமேஷிடம் 50,000 ரூபாயை ரகு கொடுத்துள்ளார்.

இதனிடையே, அந்த பெண்ணுக்கு ரகு மீது காதல் ஏற்பட, வசியம் வேலை செய்ததாக நினைத்து அந்த பெண்ணுடன் ரகு, மயிலாடுதுறையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். நாளடைவில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் தனது கணவருடனேயே சென்றுவிட்டார். இதையடுத்து, மீண்டும் கிளி ஜோதிடர் ரமேஷிடம் இரண்டரை லட்ச ரூபாய் கொடுத்து வசியம் வைக்க ரகு கேட்டுள்ளார்.

ஆனால், வசியம் வேலை செய்யாததால், மன உளைச்சலில் இருந்த ரகு, மற்றொரு ஜோதிடரிடம் நடந்ததை கூறியுள்ளார். அப்போது, கிளி ஜோதிடர் வசியத்தை மாற்றி வைத்ததால்தான், அந்த பெண் பிரிந்து சென்றுவிட்டதாக அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை நம்பிய ரகு, கிளி ஜோதிடர் ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also see…Loading…