கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் தயாரித்து சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

கீழடி அகழ்வாய்வு குறித்த முழு அறிக்கையை தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனே தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை அடுத்த கீழடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆய்வில், 5 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர் திடீரென அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு பெங்களூருவில் பாதுகாக்கப்பட்டு வரும் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையையும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்கக் கூடாது, பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.

கீழடியில் அகழாய்வு நடந்த இடம்

பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அறிக்கையை தயாரிக்க தடை கோரி மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கில் சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள மனுவில், மத்திய தொல்லியல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பாக இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Loading…

முதல் இரண்டு கட்ட அகழாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள், இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வர 6 மாதங்கள் ஆகும் என்றும் மத்திய தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கீழடி அகழ்வாய்வு குறித்த முழு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணனே ஏழு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், மத்திய தொல்லியல் துறை கீழடியில் இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகளைத் தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்..

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

#Metoo புகார் தெரிவித்த 9 பெண் ஊழியர்கள் பணிநீக்கம்?

Also See..