குடியரசு தினம்: வீரதீர செயலுக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்

70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய கொடி ஏற்றிப்பட்டு, குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெரும் விவசாயிக்கான வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர்  வழங்கினார்.

விருதுகளின் விவரம்அண்ணா விருது
வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கான விருது, தலா 3 பேருக்கும் 1 லட்சத்திற்கான காசோலையும், 5000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா குமாருக்கு துணிவுடன் தனிநபராக கொள்ளையனை துரத்தி பிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு குரங்கணி தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை, தன் உயிரை பொருட்படுத்தாமல் 8 நபர்களின் உயிரை காப்பாற்றியதற்காக வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு
வெள்ளங்கி ஏரியில் உயிருக்கு போராடிய 6 பேரை காப்பாற்றியதற்க்காக வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம் கள்ளச்சாராயத்தை கட்டுபடுத்தியதில் சிறப்பாக பணிபுரிந்த தமிழ்நாடு காவலர்களுக்கு 40000 க்கான காசோலையும் பதக்கமும் வழங்கப்பட்டது.

1.வேதரத்தினம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டது.

2.கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பிரகாஷ்-க்கு சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டது.

3.அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

4. திருச்சி மாவட்ட மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக நுண்ணறிவு தகவல்களை சிறப்பாக வழங்கிய மத்திய புலனாய்வு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமாருக்கு வழங்கப்பட்டது.

5. நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வெளிமாநில மது விற்பனை குற்றங்களை பெருமளவில் குறைக்க சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர் கோபிக்கு வழங்கப்பட்டது.

திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது

1. வேளாண் துறையில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயன்படுத்தி 50 சென்ட் நிலத்தில் 3590 கிலோ தானிய மகசூல் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சேவியர் என்பவருக்கு மாநிலத்தின் முதல் பரிசாக 5 லட்சத்திற்கான காசோலையும், 5000 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டது.

இதன் பின் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.