குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் ராஜபக்சே: தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி எம்.பி.க்களை தன் பக்கம் இழுக்க ராஜபக்சே முயலுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை அதிபர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்காத ராஜபக்சேவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவிக்கும் ரணில் தரப்பு, தாங்களே ஆட்சியில் தொடர்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதும் ரணிலுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாக அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்.பி.க்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்.பி.க்களும் வாக்களிக்க உள்ளனர். ஆனால் ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட 105 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் மேலும் பல எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் முகாமில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் சிறிசேனா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும், அப்படி வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாகவும், ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி. திசநாயகே, ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. பலித ரங்கே பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்த மேலும் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், ஆர்.டி.அசோக பிரியந்த பிரதி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தை முடக்கியதன் மூலம் ராஜபக்சே ஆதரவை திரட்ட அதிபர் சிறிசேனா உதவிபுரிவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

Loading…

இதனிடையே இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் சிறிசேனாவின் செயலாளர் உதய சேனவிரத்னே அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடியதுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பார்கள் என்பதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also watch