‘சர்கார்’ பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம் – குடும்பத்தினர் சோகம்

சர்கார் பட பேனரை கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படத்திற்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைக் காண திரையங்குகளில் குவிந்தனர். அதே நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் சர்கார் பட பேனரை கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26). சென்னையில் தனியார் பேனர் கடையில் பணிபுரிந்து வரும் இவர் தீபாவளி விடுமுறைக்காக நேற்றிரவு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனு என்பவர் சர்கார் படத்திற்காக வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புகார் மனுவினை காவேரிப்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்துவிட்டு பின்னர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மிகுந்த அச்சத்திற்குள்ளான மணிகண்டன் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றியதோடு சீனு உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த வாலிபர் சர்கார் பட பேனரால் ஏற்பட்ட மோதலில் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see: