சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 கிடைக்குமா?

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆயிரம் ரூபாய் பணத்துடன், பச்சரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் கடந்த திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன.இதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தடை உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை அரிசியுடன் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் மூன்று விதமான குடும்ப அட்டைகளும், அரிசி இன்றி சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்கள் வழங்கப்படும் குடும்ப அட்டைகளும், எந்த பொருளும் வாங்காதவர்களுக்கான குடும்ப அட்டைகளும் உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வகையிலான 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 குடும்ப அட்டைதாரர்களில், கடந்த 9ம் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 குடும்ப அட்டைத்தாரர்கள் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு பெற்று பெற்றுவிட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.Loading… அதனால் மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Also see…