சினிமா பாணியில் போலி டிடிஆர்: அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!

சினிமா பாணியில் ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதித்த போலி டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர்.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் நடிகர் கவுண்டமணி, போலி டி.டி.ஆராக நடித்து ரயிலில் பயணிக்கும் கார்த்திக்கிடம் டிக்கெட்டை பரிசோதிப்பார். பின்னர் அவர் பேருந்திலும் நடத்துனர்போல் டிக்கெட் கொடுப்பார். அப்போதுதான் அவர் போலி டிடிஆர் என தெரியவரும்.இதேபோன்ற ஒரு உண்மைச் சம்பவம், ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது. இந்த ரயிலில் பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதித்த போலி டிடிஆர் ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூர் நோக்கி ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில்  திருப்பூரை தாண்டி ஈரோட்டை நோக்கி சென்றபோது, S8 என்ற முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இளைஞர் ஒருவர் டிக்கெட் பரிசோதகர் உடையில்  பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதித்து கொண்டிருந்தார்.

இளம் வயதாக இருந்தால் சந்தேகம் அடைந்த பயணிகள் அவரிடம் கேட்டபோது, டிக்கெட் பரிசோதகராக பயிற்சி பெற்று வருவதாக கூறியுள்ளார். பயணிகளுக்கு சந்தேகம் வலுத்ததால் சேலம் கோட்ட ரயில்வே லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வந்தது. அங்கு முன்னரே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதித்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 18 வயதான சுதிர் என்பது தெரியவந்தது. டிடிஆர் என கூறி, போலியாக பயணிகளிடம் டிக்கெட் பரிசோதித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சுதிரை ரயில்வே லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈரோடு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்த ஈரோடு ரயில்வே துறை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see… கள்ளக்காதலனை கொல்ல கொலைவெறியில் காதலிLoading…