சிபிஐயின் புதிய இயக்குநரை தேர்வு செய்வதில் இழுபறி!

புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி மோதலில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் இருவரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இடைக்கால சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.இந்நிலையில், புதிய சிபிஐ இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்றிரவு தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அதில் 1982-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற 79 அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில், தகுதியுடைய 4 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அடுத்த வாரம் கூடும் தேர்வுக்குழு கூட்டத்தில் புதிய சிபிஐ இயக்குநர் நியமிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also see…