சி.பி.ஐ இயக்குநர் மாற்றப்பட்ட விவகாரம்..! உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சி.பி.ஐ இயக்குநர் பதவியில் பெயரளவு இயக்குநராக தொடர முடியாது என்று அலோக் வர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ இயக்குநராக உள்ள அலோக் வர்மாவையும், கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவையும் திடீரென்று மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல பணித்தது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா சார்பில் ஆஜரான பாலி எஸ்.நாரிமன், ‘எப்படி பெயரளவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட முடியாதோ, அதேபோல, பெயரளவு சி.பி.ஐ இயக்குநராகவும் செயல்பட முடியாது. பெயரவுளவு சி.பி.ஐ இயக்குநரை நியமிப்பதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. என்னுடைய அலுவலகத்திலுள்ள அனைத்து அதிகாரங்களும் பறித்துக் கொள்ளப்பட்டால், அதற்குப் பெயர் பணி மாற்றம் (transfer) தான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுப்படுவது மட்டும் பணி மாற்றம் இல்லை. அதிகாரத்தை முடக்குவதும் பணிமாற்றம்தான். சி.பி.ஐ. இயக்குநராக இருப்பது என்பது விஸ்டிங் கார்டில்(visiting card) மட்டும் சி.பி.ஐ இயக்குநர் என்று இருப்பது இல்லை’ என்று தெரிவித்தார்.

அதனையடுத்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ‘அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு முன்னதாக ஏன் தேர்வுக் குழுவுடன் விவாதிக்கவில்லை. தேர்வுக் குழுவுடன் விவாதிக்காமல் அவர்களைப் பதவி நீக்கம் செய்ததைவிட விவாதித்தப் பிறகு முடிவு எடுத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். இது சட்டத்தைப் பின்பற்றுவது தொடர்பான கேள்வி மட்டுமல்ல. சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை வலியுறுத்துவது. ஏன் அரசு முழுவதும் வெளிப்படையாக இல்லை. நிர்வாகம் செய்வதற்கு எது சிறப்பானதாக இருக்கிறதோ அதுவே எல்லா அரசினுடைய செயல்பாட்டின் சாரம்’ என்று தெரிவித்தனர்.

Also see: