செஞ்ச சத்தியத்தை காப்பற்றிய ஒரே ஆள் சேவக் தான்…. : லட்சுமன்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் விவிஎஸ்., லட்சுமண். நான்காவது இன்னிங்ஸ் நாயகன் என செல்லமாக அழைக்கப்படும் இவர், கடந்த 2012ல் திடீரென ஓய்வை அறிவித்து பெரும் ஷாக் கொடுத்தார். இதற்கு முன்னாள் கேப்டன் தோனி தான் காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

காரணம் என்ன?
கடந்த 2012ல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக (4-0) என கைப்பற்றியது. இத்தொடரில் விவிஎஸ்., லட்சுமண் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் அதன்பின் வந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் லட்சுமண் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

முன்பே சொன்ன சேவக்?
இந்நிலையில் சமீபத்தில் தனது சுயசரிதையை வெளியிட்ட லட்சுமண், தனது ஓய்வுக்கு தோனி காரணம் இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதே போல தனது சுயசரிதையில், சேவக் தான் தான் டெஸ்டில் முச்சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் ஆவேன் என டெஸ்டில் பங்கேற்காத போதே தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

செஞ்ச சத்தியம்…..
இது தொடர்பாக அதில் குறிப்பிட்டுள்ள லட்சுமண், ‘கடந்த 2000/01 இந்தியா வந்த ஆஸ்திரேலிய தொடரில் தான் சேவக் ஜொலித்தார். முதல் ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. அதில் சேவக் 58 ரன்களும், 3 விக்கெட் கைப்பற்றி ஆல்ரவுண்டராக அசத்தினா. பின் புனேவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, நான், ஜாகிர், சேவக் டின்னருக்கு சென்றோம்.

அப்போது சேவக், ஆஸி.,க்கு எதிரான டெஸ்டில் 281 ரன்கள் நான் எடுத்த போது, 300 அடிக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவும், அதை நான் தவறவிட்டுவிட்டதாகவும், அதனால் தான் தான் 300 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை பெறுவேன் என்றும் தெரிவித்தார்.

ஜோக் என நினைத்தேன்…..
அப்போது வெறும் 4 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற ஒருவர் இப்படி சொல்கிறாரே, ஜோக் என நினைத்தேன்… ஆனால் சேவக் மிகவும் தீவிரமாக இருந்தார். பின் 2004ல் முல்தான் டெஸ்டுக்கு பின் என்னிடம் வந்து, நான் தான் சொன்னேன்ல… என்றார். ஆனால் எனக்கு என்னுடைய சாதனையை தகர்த்ததால் பிடிக்கவில்லை.’ என குறிப்பிட்டுள்ளார்.