ஜனநாயகப் போராட்டத்திலிருந்து விலகிவிடக் கூடாது: மக்களுக்கு ரணில் வேண்டுகோள்

ஜனநாயகத்துக்கான போராட்டத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்று இலங்கை மக்களை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே-வை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச-வை அதிபர் சிறிசேனா அண்மையில் நியமித்தார். இதனைத் தொடர்ந்து, அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், அன்றைய தினம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்று ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் சிறிசேனா-வின் திடீர் முடிவுக்கு எதிராக அதிகமான அளவில் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்திய மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துக் கொண்டுள்ளார். இலங்கையில் ஜனநாயகம் பறிக்கப்பட்டு, 13 நாட்கள் ஆகியிருப்பதாகவும், இந்த கருப்பு நாட்களில் பொதுமக்கள் தங்களது போராட்டத்திலிருந்து விலகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரத்தின் இருளில் நாடு வீழ்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நமது அடிப்படை சுதந்திரத்துக்காகவும், நமது உரிமைகளுக்காகவும், நமது நாட்டுக்காகவும் இந்தப் போராட்டத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்றும் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

Also see…