டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய பின்னர், இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், “குக்கர் சின்னம் பொதுவான சின்னமாக இருப்பதால் அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு வழங்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இதற்கு டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா மூன்று எம்.பி.க்கள் எங்கள் அணியில் உள்ளனர். இதுதான் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்றால் அரசியல் செயல்பாடுகளை எப்படி தொடர முடியும்?” என்று வாதிட்டார்.