தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24-ல் தொடக்கம்!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. இதில் 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் மற்றும் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. இதில் 40 இடங்களில் 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 306 இடங்களைக் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 9,798 பேரும், பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்கு 1,949 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், 24 ம் தேதி சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கும், 25, 26 தேதிகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் மற்றும் தர வரிசை பட்டியல் அடங்கிய விவரங்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.