தாழ்த்தப்பட்டவர் சமைத்த உணவை உண்பதா? – தொடரும் தீண்டாமை கொடுமை

சேலத்தில் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், சமையலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட குப்பன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சமையலராக பணியாற்றி வந்தவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கே.மோரூர் மேல்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த ஜோதி என்பவர், பதவி உயர்வு பெற்று இப்பள்ளியின் சமையலராக நியமிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது பணியை தொடங்கியுள்ளார்.ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஏற்க முடியாது என்று இதர சாதியினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், 40-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து, ஜோதியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால், குழந்தைகள், தான் சமைக்கும் உணவை சாப்பிடுவதாகவும், அவர்களின் பெற்றோர்கள் தான் தன்னை மிரட்டுவதாகவும் ஜோதி தெரிவித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமையலர் ஜோதியை இடமாற்றம் செய்ய  வலியுறுத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை இடமாற்றம் செய்யதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு திருச்செங்கோடு அருகே பாப்பம்மாள் என்ற சமையலரை பணியிட மாற்றம் செய்ய கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.