திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட பாஜக எதிர்ப்பு

சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான் பிறந்தநாள் வரும் 10-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், மைசூர் மாகாணத்தை ஆண்ட மன்னருமான திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா, கடந்த 2016-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு முதலே இந்த விழாவுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெறுமா என கேள்வி எழுந்தது.இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாடுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். நவம்பர் 10-ம் தேதி திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா அரங்க நிகழ்வாக, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார். விழாவை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜி.பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

திப்பு ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும், விழா கொண்டாடப்படும். இதற்காக உள்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டேன். அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தேன்.

திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாடும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில மூத்த பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, மக்களவை தேர்தலுக்கு வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸ் கட்சி திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதாகக் குற்றம்சாட்டினார். திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டால், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி உடைவதுடன், குமாரசாமியின் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா அழைப்பிதழில் தனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். திப்பு சுல்தானுக்கு விழா எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Also see…

Loading…