திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

திமுக பொருளாளர் துரை முருகனுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்து 4 வாரங்களுக்குள் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013-ல் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் 2023 வரை செல்லுபடியாகும். பாஸ்போர்ட் புத்தகத்தின் பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்கக் கோரி துரைமுருகன் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்தது. இதை எதிர்த்து துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.2011-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து தன்னை கீழமை நீதிமன்றம் விடுவித்துவிட்டதாகவும், சீராய்வு மனு மட்டும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பாஸ்போர்ட் வழங்க கோரிய விண்ணப்பத்தை திருப்பி அளித்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்தார்.

மேலும், மீண்டும் துரைமுருகன் விண்ணப்பித்தால் 4 வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுளார்.

Also see… திமுக கூட்டணி இரும்புக் கோட்டை – வைகோ