திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

0

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.

சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் நிலையம் வந்தடைந்ததும், தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது.
தேரோட்டத்தில் கோவில் இணை ஆணையர் பாரதி, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியஆதித்தன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், முருகன் ஆதித்தன், சிவனேச ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.