திருவாரூரில் தேர்தல் நடக்குமா? தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையிலேயே முடிவு

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவின் அறிக்கை அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி.ராஜா, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் ஆணையம் அறிக்கை கேட்டது.அதைத் தொடர்ந்து, சத்யபிரதா சாஹூவின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாம் எனக் கருத்து தெரிவித்தனர்.

அமமுகவுக்கு அங்கீகாரம் இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கள நிலவர அறிக்கை, சத்யபிரதா சாஹுவுக்கு நேற்று அனுப்பப்பட்டது. அவர் அந்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று அனுப்பினார்.

அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இது தொடர்பாக டி.ராஜா தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகளை பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

Also see…