தீபாவளிக்காக நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக வரும் 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை (அக்.2) முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொதுமக்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு செய்துள்ளதாகக் கூறினார். 3-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை முதலே சிறப்புப் பணிமனைகள் மூலமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 20 விழுக்காடு போனஸ் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கேட்ட முன்பணம் நாளை வழங்கப்படும் என்றும் கூறிய அவர், முதலமைச்சர் இதற்காக 45 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை 251 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணம் திங்கட்கிழமை போக்குவரத்து ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறிய அமைச்சர். இதன்மூலம் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Also watch