தீபாவளிக்கு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்பவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கு 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இடைப்பட்ட நிறுத்தங்களுக்கும் முழுகட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனிடையே போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னையிலிருந்து திருச்சி வரையிலும் சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கென தனி வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தனியார் வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் வந்ததால் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகள் தேங்கி நின்றன.

சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திங்கட்கிழமை எதிர்பாராத விடுமுறை கிடைத்ததால் முன்பதிவில்லாத கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தென்மாவட்டங்களுக்கு போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை என புகார் தெரிவித்த பயணிகள், தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலை எழும்பூரிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Loading…

Also see…