தென் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் இன்று 2 புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடைவெளிவிட்டு விடிய விடிய மழை பெய்தது.

அந்தமான் கடல்பகுதியில் காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்தது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே இன்று புதியதாக 2 காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நாளை முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலைகள் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என்றும், இதனால் வருகிற 9-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடலுக்கு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல்பகுதியில் காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையால் சென்னையில் நேற்று விட்டு விட்டு லேசாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாலை முதல் விடிய விடிய சாரல் முதல் மிதமான மழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூக்கடைச்சத்திரம், ஓரிக்கை , செவிலிமேடு, பெரியார் நகர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் இடைவெளிவிட்டு கனமழை பெய்தது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், லேசான காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.Loading… வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை,ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் கோம்பைப்பட்டியை அடுத்த பெரியதுரையான் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோம்பைப்பட்டியில் இருந்து மூலக்கடை கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்துடன் பாலத்தை கடந்துச் செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ,கோவிலூர், செக்காலை போன்ற பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

Also see….ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கவிதை வீடியோ