தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு ரூ.300 கூலி: தண்டோரா போட்டு அறிவித்த கட்சி

தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு ரூ.300 கூலி வழங்கப்படும் என தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் தண்டோரா போட்டு அறிவித்தனர்.

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி தெலுங்கானாவில் நடைபெற்று வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தனது அரசை முன்கூட்டியே கலைத்தார். தற்போது, அவரது தலைமையில் காபந்து அரசு நீடிக்கிறது.இதனிடையே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுடன் சேர்த்து தெலங்கானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி தெலங்கானா மாநிலத்திலுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள யாத்கிரிகுட்டாவில்  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஆசீர்வாத சபை என்ற பெயரில் நடைபெற்றது. இதில் சந்திரசேகர் ராவின் மகனும், அமைச்சருமான கே.டி.ராமாராவ் கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக, இந்தக் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படும் என்று கிராமங்களில் தண்டோரா போட்டு அறிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading…

Also  watch