நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 6 பேர் கைது

திருநெல்வேலியில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக கூறி 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.இந்நிலையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பலரும் எதிர்த்தனர். அதனால் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி உச்ச நீதிமன்றத்த்தை நாடியது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தீபாவளியன்று தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் காலையிலும் பட்டாசு வெடிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும் காலையில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

இதனை தொடர்ந்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது.

அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில்தான் பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

இந்நிலையில் நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக கூறி 6 பெரியவர்கள் மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் 6 பெரியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading…

Also see…