”பல நரகாசுரர்களால் மக்கள் அல்லல்படுகிறார்கள்”: தமிழக தலைவர்களின் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தீபாவளி அனைத்து குடும்பங்களிலும் ஒளியையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் என்றும், தீப ஒளியை போல நம்மை சுற்றியுள்ள அனைவரது வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டு வர முற்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில், மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்; வளம் பெருகட்டும் வாழ்வு சிறக்கட்டும் என்று கூறியுள்ளார். மனமெல்லாம் இனிமை பொங்கும் நாளாகவும், உள்ளத்தில் உள்ள இருள் விலகி புத்தொளி பிறக்கும் நாளாகவும் தீபாவாளி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று, இன்பமுடன் வாழ வாழ்த்துவதாக, அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிகாச கால நரகாசுரன் அழிந்தாலும், பல நரகாசுரர்கள் மத்தியில் மக்கள் சிக்கி அல்லல்படுவதாக கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தீமையை ஒழித்து நன்மையை வளர்க்க  சபதம் மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற, இலக்கை நோக்கி உழைக்க, உறுதியேற்போம் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இருப்பதை கொண்டு தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறு கூறியுள்ளார். எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்து, மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

Also see…

Loading…