பழங்கால சிலைகள் விவகாரம்: சாராபாய் பவுண்டேஷன் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பழங்கால சிலைகள் ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன் நிறுவனம் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்துள்ள வழக்கில் குஜராத் சாராபாய பவுண்டேசன் நிறுவனம் நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் தமிழகத்துக்குச் சொந்தமான 35 சிலைகள் உள்ளதாகவும் அவை அனைத்தும் சட்டவிரோதமாக அங்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .இந்த சிலைகள் அனைத்தும் முறையாக வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் மேலும் அந்த சிலைகள் எல்லாம் வழிபாடு செய்யக் கூடிய சிலைகள் என்றும் அவற்றை மீண்டும் தமிழகத்திற்கே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் அங்கிருந்து மீட்கப்பட்டு வந்ததையும், சுட்டிக் காட்டியிருக்கிறார். சிலைகள் மீட்பு குழுவினருடன் சென்ற போது 30-க்கும் மேற்பட்ட சிலைகள் அங்கு உள்ளதாகவும் அதனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன் இது குறித்து சாராபாய் பவுண்டேஷன் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.