பாண்டியா, ராகுலுக்கு பதில் தமிழக வீரா் விஜய் சங்கருக்கு ஆஸி. தொடரில் வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹா்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு பதில் விஜய் சங்கா், சுப்மேன் கில் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹா்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடா்ந்து அவா்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாண்டியா மற்றும் ராகுலுக்கு பதிலாக தமிழகத்தைச் சோ்ந்த விஜய் சங்கா் இடம் பெற்றுள்ளாா். மேலும் மற்றொரு வீரராக மயங்க் அகா்வால் சோ்க்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா் விளையாட முடியாத சூழலில் இருப்பதால் பஞ்சாப்பைச் சோ்ந்த சுப்மேன் கில் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் வருகின்ற 15ம் தேதி நடைபெற உள்ளது.