பார்வதி தேவி அனுஷ்டித்த விரதம் உருவான கதை

இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.
தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம்.
கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும், குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவ அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இன்று ஒரு கலசத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் (கயிற்றில்) அம்மனை ஆவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து, அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை, நிவேதனம் செய்து, பூஜை முடித்து பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை சுமங்கலிப் பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு 21 சுமங்கலிப் பெண்களுக்கு 21 வெத்தலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்கி அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவபார்வதி அருள் கிட்டும் என்கிறது ஸ்காந்த மகாபுராணம்.

இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதை வருமாறு:-
சிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்காதவர் பிருங்கி முனிவர். ஒருமுறை, ஈசனைத் தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் பிருங்கி முனிவர். அங்கு, சிவபெருமானும், பார்வதி தேவியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். ‘இப்போது வணங்கினால், பார்வதிதேவியையும் சேர்த்து வணங்க நேரிடுமே’ என்று எண்ணிய பிருங்கி முனிவர், சிவ பெருமானை மட்டுமே வணங்க தந்திரம் ஒன்று செய்தார்.
தன்னை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு சிவபெருமானை மட்டும் வட்டமிட்டுப் பறந்து வணங்கித் திரும்பினார். இதைக்கண்ட பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். முனிவரின் உடலில் திகழும்… தனது சக்தியான ரத்தம், சதை ஆகியவற்றை வற்றச் செய்தாள். இதனால் நிற்க முடியாமல் தடுமாறிய பிருங்கி முனிவர் கீழே விழுந்தார்.
தனது இந்த நிலைக்கான காரணத்தை அறிந்த முனிவர், “தங்களை மட்டுமே வணங்கும் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா?” என்று கண்ணீர் மல்க பரமேஸ்வரனிடம் முறையிட்டார். மனமிரங்கிய பரமேஸ்வரன், முனிவருக்கு ஊன்று கோல் அளித்து அருளி னார். அதன் உதவியுடன் எழுந்து நடக்கலானார் பிருங்கி முனிவர். ஆனால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது. பார்வதி தேவி வெகுண்டாள்!
‘இனி, சிவபெருமானை எவர் வந்து வணங்கினாலும் என்னையும் சேர்த்து வணங்கிச் செல்ல வேண்டும்!’ என்று எண்ணியவள், கவுதம முனிவரது ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், பிருங்கி முனிவரால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எடுத்துரைத்தாள். “இனி, இது போல் அவமானம் நேராமல் இருக்க, தாங்களே வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதைக் கேட்ட கவுதம முனிவர், “மகா சக்தியே… நாங்கள், இருபத்தோரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஒன்றை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் நிறைவுறும் போது, தங்களது விருப்பம் நிறைவேறும்!” என்று கூறியதுடன், அந்த விரதம் குறித்த நியதிகளையும் விளக்கினார்.
அதன்படி, புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் துவங்கி இருபத்தோரு நாட்கள் விரதம் அனுஷ்டித்தாள். நிறைவு நாளன்று, அவள் முன் காட்சியளித்தார் சிவனார். அவரிடம் தனது விருப்பத்தைக் கூறினாள் பார்வதிதேவி. உடனே, “தேவி! இனி, என் மேனியில் இடபாகம் உனக்குச் சொந்தம். நம்மை எவராலும் பிரித்துப் பார்க்க இயலாது. என்னை வணங்குவோர் அனைவரும் உன்னையும் சேர்த்தே வணங்குவார்கள்” என்று அருளினார்.
அதன்படி இறைவனின் இட பாகம் பெற்றாள் அம்பிகை. இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். கவுரியாகிய ஸ்ரீபார்வதிதேவி கடைப்பிடித்த இந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்று போற்றுவர்.
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திருநாள் தொடங்கி, தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து கவுரி தேவியையும், சிவபெருமானையும் பூஜித்து வழிபடும் பெண்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்வும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.