பிளாஸ்டிக் தடையால் வாழை இலைகளுக்கு அதிகரிக்கும் மவுசு…! விவசாயிகள் ஹேப்பி

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான மோகனூர், பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், ஆனங்கூர், வெங்கரை, பொத்தனூர், வேலூர் அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்று வந்த ஒரு கட்டு வாழை இலை, தற்போது 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சேலத்தில் இருசக்கர வாகனம் மூலம் சிறு உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 100 கட்டு இலை விற்பனை செய்வதே கடினமாக இருந்த நிலையில், தற்போது மதியத்துக்குள்ளாகவே 150 கட்டுகள் விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடரும் பட்சத்தில், வாழை, பாக்கு மட்டை உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்து விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நாமக்கல், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாழை இலைகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.

மேலும், 500 பெரிய இலைகள் கொண்ட ஒரு கட்டு விலை, 750 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தட்டு போன்ற ஒரு இலையின் விலை, ஒரு ரூபாயில் இருந்து ஒரு ரூபாய் 20 காசுகளாக அதிகரித்துள்ளது.Loading… முகூர்த்தம் போன்ற சீசன் காலங்களில் இலையின் வரத்தைப் பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Also See…