பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு!

2018-ம் ஆண்டின் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இன்று வெளியானது.

நோபல் பரிசு என்பது முக்கிய துறைகளுக்கான உலக அளவிலான அங்கீகாரம். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்படி, இந்த பரிசு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் நார்தஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பால் ரோமர் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து வில்லியம் நார்தஸ் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், சிறப்பான பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைவது? என்பது தொடர்பாக பால் ரோமர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.