ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச தண்ணீருடன் Wi-Fi! சேலத்தில் அசத்தல் முயற்சி

சேலத்தில், பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் தாகத்திற்கு தண்ணீர் மற்றும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி ஆகியவற்றை கொடுக்கும் நவீன இயந்திரம் முதல்முறையாக பொறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சேலத்தைப் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சியாக மாற்றும் முயற்சியாக, பல்வேறு நடவடிக்கைகளை அம்மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் பற்றி கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக, தமிழகத்திலேயே முதன்முறையாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் புதிய இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் துவக்கி வைத்தார்.

அந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி லிட்டர் முதல் இரண்டே கால் லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டிலை போடும்போது அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரிக்கப்படும்.

காலியான பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக ஐந்து நிமிடம் இலவசமாக செல்போன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, ஐந்து நிமிடம் இலவச wifi வசதி, 250 மில்லி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்ட ஐந்து வகையான சலுகைகளை இலவசமாக வழங்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.Loading… புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆர்வத்துடன் பயன்படுத்தினர். பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த மாநகராட்சி ஆணையர் சதீஷ், ‘பின்வரும் காலங்களில் இந்த திட்டம் சேலம் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

Also see: