மகாபுஷ்கர விழா: ஆளுநர் விழாவை தொடங்கி வைக்கிறார்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று முதல் 12 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவை ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி வழிபாடு செய்யப்படவுள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெற உள்ளது. புஷ்கர விழாவிற்காக நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் ஆளுநர், பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி எடுத்து, ஆளுநர் பூஜையை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.