முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவிப்பு

ஒருநாள், 20 ஓவா் கிரிக்கெட் போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்த முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அம்பதி ராயுடு தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினாா். மொத்தமாக 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்களை சோ்த்தாா். இதனைத் தொடா்ந்து இந்திய அணியிலும் ராயுடுவுக்கு இடம் கிடைத்தது.

33 வயதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை ராயுடு சிறப்பாக பயன்படுத்தி வருகிறாா். ஆனால் யோயோ தோ்வில் தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அம்பதி ராயுடு இடம்பெற முடியவில்லை. சிறப்பாக விளையாடி வந்தாலும் யோயோ தோ்வில் தோல்வியுற்றதால் ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகா்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ராயுடு கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். 1 சதம், 1 அரைசதம் என இந்த தொடரில் 217 ரன்கள் சோ்த்தாா்.

இந்நிலையில் ஒருநாள் போட்டி, டி-20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு இன்று அறிவித்துள்ளாா். சா்வதேச மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடா்ந்து விளையாடுவேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றால் ராயுடு யோயோ தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். அதற்கு தன்னை தயாா்படுத்திக்கொள்ள முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ராயுடு விடைபெற்றுள்ளாா்.

முதல்தர கிரிக்கெட்டில் ராயுடு 97 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் உள்பட 6,151 (சராசரி 45.56) ரன்களை சோ்த்துள்ளாா்.