மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

பாஜக-விடம் இருந்து நாட்டைக் காக்கவே தானும், தேவகவுடா போன்ற தலைவர்களும் ஓரணியில் திரள்வதாகவும், இதே காரணத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கவுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

பாஜக-வுக்கு எதிராக தேசிய அளவிலான கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு பேசிய நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும், அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமியையும் பெங்களூருவில் இன்று சந்தித்து பேசினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கவுள்ளதாக  சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.பாஜக ஆட்சியில் சிபிஐ அமைப்பும், ரிசர்வ் வங்கியும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்கவே அனைத்து கட்சித் தலைவர்களும் ஓரணியில் திரள்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜியும், குமாரசாமியும் அவரவர் மாநிலங்களில் ஜனவரியில் பெரிய பேரணியை நடத்தவுள்ளனர். அதில் அனைத்து தலைவர்களும் பங்கேற்பர். தகுந்த நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்  சந்திரபாபு நாயுடு.

Also watch