மேகதாது அணையில் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று ஆய்வு

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று மேகதாதுவில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மேகதாதுவில், அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நேரத்தில், பெங்களூருவில் மேகதாது அணை குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள், சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் பாசனத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தின் முடிவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பான பணிகளைத் தொடரவும் உச்சநீதிமன்றத்தில், இந்த வழக்கிற்கு தடை விதிக்காமல் பார்த்துக் கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. காவிரி ஆறு, இடம்: மேகதாது

இந்நிலையில், அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை சிவக்குமார் மேகதாதுவில், அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள பகுதியில் இன்று ஆய்வு செய்ய உள்ளார். நீர்ப்பாசனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அவருடன் ஆய்வுப்பணியில் ஈடுபட உள்ளனர்.

முன்னதாக கர்நாடக அமைச்சர் சிவக்குமார், மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அணை தொடர்பாக தமிழக அரசிடமும், தமிழக மக்களிடமும் தவறான கருத்து நிலவுவதாகவும், அணை குறித்த விரிவான விளக்கங்களை அளிக்கும் வகையில் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also see… வைகோ VS திருமாவளவன்