யார் இந்த கிரிஸ்டியன் மைக்கேல்? – 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவா?

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் ஊழல் ஒன்றில் தொடர்புடைய சர்வதேச இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் நேற்று இரவு சிபிஐ விசாரணைக்காக துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் கிறிஸ்டியன் மைக்கேன் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்ட இந்த கிறிஸ்டியன் மைக்கேலின் கைது வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என விமர்சகர்களால் கூறப்படுகிறது.இந்திய விமானப் படைக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர்தான், இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல்.

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் சிக்கிய கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் தஞ்சமடைந்தார். இதன் பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்காக கிறிஸ்டியனை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரியது இந்திய அரசாங்கம். இதை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் தொடுத்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார் கிறிஸ்டியன்.

இந்த வழக்கில் மற்றொரு இடைத்தரகராக செயல்பட்ட கீடோ ஹாஸ்கே என்பவர் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது உடைமைகள் மீதான சோதனையில் ‘காந்தி’ குடும்பம் தொடர்பான குறிப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது. இதன் பின்னரே இந்த ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சி இணைத்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் காங்கிரஸ் உடனான தொடர்பு ஏதும் இல்லை என இடைத்தரகர் கீடோ ஹாஸ்கே தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து இந்த ஊழல் விசாரணையில் காங்கிரஸ் பெயர் தொடர்ந்து அடிபடுவது வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பார்க்க: இயக்குனர் சங்கர் படங்களை வெற்றியடையச் செய்த காட்சிகள்