ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும்… ஆதரவு குறித்து கமல் வேதனை!

ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும். ஆனால் மக்களை 4 வயதிலிருந்தே தெரியும். மக்கள் வருகிறார்கள் அதுபோதும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வரும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவருமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் கால் பதித்தனர். கடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். இதற்குப் பின்னர் 2018-ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.தற்போது மக்களவைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். ஆனால் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

அதேவேளையில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு வாக்களியுங்கள் என்று தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் தனக்கு ஆதரவளிப்பார் என நம்புகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த பிப்ரவரி மாதத்தில் நெல்லையில் நடைபெற்றது. இதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில், “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர். என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.Loading… அப்போது இதற்கு நன்றி தெரிவித்திருந்த கமல், “நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே .நாளை நமதே.” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினிகாந்த தனக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கமல்ஹாசன் கூறியதாவது, “வருகிறேன் என்றார் ரஜினி. ஆனால் இன்னும் வரவில்லை. என்னை ஆதரிப்பதை ரஜினிகாந்த் தான் வெளிப்படுத்த வேண்டும். நான் திரும்ப திரும்ப கேட்கக்கூடாது.

ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும். ஆனால் மக்களை 4 வயதிலிருந்தே தெரியும். மக்கள் வருகிறார்கள் அதுபோதும். யார் ஆதரித்தாலும் மகிழ்ச்சி. ரஜினி ஆதரவளித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

EXCLUSIVE: தமிழகத்தில் நாங்கள் தான் ஏ டீம் – கமல்ஹாசன் பேட்டி

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.