வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: சட்டப்படி விசாரணை நடத்தப்படும் – டெல்லி போலீஸார்!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று அமெரிக்க வாழ் இந்தியர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக வந்த புகார் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர் சையது சுஜா குற்றம்சாட்டியிருந்தார்.லண்டனில் நடைபெற்ற செயல் விளக்கத்தில் ஸ்கைப் மூலம் கலந்துகொண்டு பேசிய அவர், வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் இந்திய மின்னணுவியல் கழகத்தில் பணியாற்றியதாகவும், வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தவறான தகவலை பரப்பியதாக சையது சுஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் 505-வது பிரிவின் கீழ் உரிய விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், புகாருக்குள்ளான சுஜா, தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும், வாக்கு இயந்திரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் இந்திய மின்னணுவியல் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Also see…