விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அவர்களது கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகியவை அடங்கும். இதன் மூலம் தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் கோவை மற்றும் ஈரோட்டில் உள்ள சில கோட்டங்களை இணைத்து 32-வது மாவட்டமாக திருப்பூர் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது.

விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று பொதுமக்களும், அதிமுகவினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தனி மாவட்டமாக உதயமாவதால் கள்ளக்குறிச்சி மேம்படும் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Also see…